இந்தியாவிலேயே இருக்க விரும்பும் அமெரிக்கர்கள்

புதுடில்லி: இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தபோது, பெரும்பாலானோர் இந்தியாவில் இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வருகின்றது. அந்த வகையில், கடந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 444 பேர் டில்லியில் இருந்து மெல்போர்னுக்கு சிறப்பு விமானம் மூலம் அனுப்பப்பட்டனர். அதேபோல், வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களை அழைத்து செல்ல அந்நாட்டு வெளியுறவுத்துறை சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. சிறப்பு விமானங்கள் மூலமாக இதுவரை 50 ஆயிரம் பேர் அழைத்து வரப்பட்டதாக அதிபர் டிரம்பும் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள், இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக வாஷிங்டன் டி.சி.,யில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இயன் பிரவுன்லி கூறுகையில், இந்தியாவில் பல ஆயிரம் அமெரிக்கர்கள் உள்ளனர். அவர்களை இந்த வாரத்தில் ஒரு விமானத்தில் கூட்டிவர, 800 பேரிடம் அழைப்பு விடுத்தோம். அதில் 10 பேர் மட்டுமே அமெரிக்கா வருவதாக விருப்பம் தெரிவித்தனர். மற்றவர்கள் இந்தியாவில் இருக்க விரும்புகிறார்கள். சிலர் நிச்சயமற்ற தன்மையில் இருந்தனர். இந்தியாவில் இன்னும் 24,000 அமெரிக்கர்களை கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.