திக்... திக்... பங்களா

சென்றவாரம்: சென்னையில் வசித்த இரட்டையர்கள், கோடை விடுமுறைக்காக, பழைய குற்றாலத்தில் கொள்ளு தாத்தா வீட்டுக்கு புறப்பட்டனர். ரயில் ஏறிய போது அப்பா கொடுத்த கவரில், 'உங்கள் பெற்றோர் நாங்கள் அல்ல' என்று எழுதியிருந்தது. இனி -
கைகளை தலை மீது வைத்து கூவினான் வினு.
'மாதேஷ், த்ரிஷா என் பெற்றோர் இல்லையா... மது என் தங்கை இல்லையா... பழைய குற்றாலத்தில் இருக்கும் கொள்ளு தாத்தாவும், பாட்டியும் கூட சொந்த மில்லையா... அப்போ நான் யார்' யோசித்தான்; தலை சுற்றியது.
அந்த துண்டுத் தாளை வெறித்தாள் மது; கடித வரிகள் மங்கின.
'வினு...'
'அப்பா, அம்மா...
ஏதோ தமாசு பண்ணியிருக்காங்க...' என்றாள் மது.
'இல்லை...'
'போடா... இரண்டு பேரும் ஜாலி டைப்... எத்தனை முறை முகமூடி போட்டுக்கிட்டு நம்ம அறைக்குள்ள வந்து பயமுறுத்தி இருக்காங்க அப்பா... துாங்கும் எனக்கு மீசை வரைஞ்சு விட்டிருக்காங்க அம்மா... பசியோட சாப்பிட வந்தா, வெறும் தட்டை முடி எடுத்து வந்து உணவு பரிமாறுவது மாதிரி நடிச்சு வெறுப்பேத்தியிருக்காங்க...'
'இல்லடி... இது நிஜ கடிதம் தான்; எனக்கும் நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே ஒரு சந்தேகம். அது இன்னைக்கு ஊர்ஜிதம் ஆயிருச்சு...'
'என்னடா சந்தேகம்...'
'நாம ரொம்ப அழகா இருக்கோம்; பெற்றோர் ரொம்ப சுமார்; அவங்களுக்கு போய் நாமெப்படி பிறந்தோம்ன்னு சந்தேகப்பட்டேன்...'
'அம்மாவின் கால்துாசி பெறுவோமாடா...'
மீண்டும் அந்த துண்டு கடிதத்தை ஆராய்ந்தான் வினு. எழுத்தின் நெளிவு, சுளிவு கையெழுத்து அப்பாவுடையது என உறுதியானது. கடிதத்தை மடித்து சட்டைப் பைக்குள் போட்டான்.
'அடுத்து என்ன செய்யலாம்...'
'விழுப்புத்துல ரயில் நிற்கும்; ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட அனுமதி வாங்கிட்டு அப்பாவுடன் பேசுவோம்...'
ரயில் விழுப்புரம் ஜங்ஷனுக்கு பிரவேசித்தது.
'நீ இரு மது; நான் பேசிட்டு வர்றேன்...'
'நானும் வருவேன்...'
ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு ஓடினர். அவர் நெற்றி சுருக்கியபடி, 'யார் நீங்க; உங்களுக்கு என்ன வேணும்...' என்றார்.
'எங்க பெற்றோர்கிட்ட அவசரமா பேசணும்...'
'அப்படி என்ன தலைபோற விஷயம்...'
'அதை சொல்ல முடியாது; குடும்ப ரகசியம்...'
'பேச முடியாது... ரயில் கிளம்பிடும்; ஓடுங்க உங்க பெட்டிக்கு...'
கோபத்துடன் இருக்கைக்கு வந்தனர்.
பக்கத்து இருக்கையிலிருந்து எழுந்து வந்தவர், 'நீங்க தான் வினு, மதுவா...' என்றார்.
'ஆமா...'
'உங்க அப்பா எழும்பூர்ல ஒரு கவர் கொடுத்தாரா...'
'ஆமா...'
'அதை பிரிச்சுப் படிச்சீங்களா...'
'ஆமாய்யா... அதுக்கென்ன...'
'அப்படின்னா இந்தாங்க; இதையும் பிரிச்சுப் பாருங்க; உங்க அப்பா கொடுக்கச் சொல்லியிருக்கார்...'
வாங்கி பிரித்தனர்.
அதில் -
முந்திரிக் கொட்டைகளா... மாயவரம் போகும் வரை காத்திருக்க முடியவில்லையா... மூளையைக் குழப்பாமல் சாப்பிட்டு காத்திருங்கள். மாயவரம் வந்ததும், உங்க இடது கையை ஆராயுங்கள்; உண்மை புரியும்...
- மாதேஷ், த்ரிஷா.
இவ்வாறு, எழுதப்பட்டிருந்தது.
நேரம் கரைய மறுத்தது.
மாயவரம் ஜங்ஷன் வந்தது. பரபரத்து இடக்கையை ஆராய்ந்தனர்.
'எதாவது, டாட்டு மார்க் குத்திவிட்டிருக்காரோ அப்பா...'
தற்செயலாக வினுவின் கண்கள் இடது மணிக்கட்டுக்கு பாய, கை கடிகாரம் கண்ணில் பட்டது.
நள்ளிரவு, 12:00 மணி.
முகவாயை தேய்த்தான் வினு.
துள்ளிக் குதித்தாள் மது.
'நான் கண்டுபிடிச்சிட்டேன்டா...'
'என்ன...'
'அதாவது இன்னைக்கு, 'ஏப்ரல் 1' இல்லையா...'
'ஆமா... அதுக்கென்ன...'
'வாத்து மடையா... ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் இல்லையா...'
'நிஜமாவா...'
'அப்படித்தான் இருக்கணும் வினு...'
டி.டி.ஆர்., காப்பி உறிஞ்சியபடி வந்தார்.
'உங்க அப்பா கொடுத்த கடிதத்தையும், பெர்த் எண்: 27 பயணி கொடுத்த கடிதத்தையும் வாசிச்சு இருப்பீங்க! இந்தாங்க, மூணாவது கடிதம். இதையும் வாசிச்சுப் பாருங்க. உங்கப்பா கொடுத்தது தான்...' என்று குறும்பாய் சிரித்தார்.
கடிதத்தை பிரித்தான் வினு.
அதில் -
மண்டூஸ்... ஏப்ரல் பூல்ஸ்! ஏமாந்தீங்களா... போன வருஷம் நீயும், மதுவும் எங்களை எப்படி முட்டாள் ஆக்கினீங்க... ஒரு வருஷம் காத்திருந்தேன்.
ஓடுற ரயிலில் வித்தியாசமாக ஒரே துண்டுச் சீட்டு மூலம் எப்படி கதிகலங்க வைத்து விட்டோம் பார்த்தீர்களா... உங்களை சிரமப்பட்டு பெற்று வளர்த்து, படிக்க வைத்த நாங்கள் பெற்றோர் இல்லையென்றால், பரிவாக கவனித்திருப்போமா... வி லவ் யூ சில்ரன்.
- பாசமிகு பெற்றோர், மாதேஷ் - த்ரிஷா.
இவ்வாறு, எழுதப்பட்டிருந்தது.
வானம் வெடிக்க மதுவும், வினுவும் சிரித்தனர்.
'ஆறு மணி நேரமா திணற வெச்சுட்டாங்களே...'
'ஏமாந்த வருத்தத்தை விட, முதல் கடிதத்துல உள்ள வாசகம் பொய் என்கிற ஆனந்தம், 100 மடங்கு...' என்று பெருமூச்சு விட்டான் வினு.
இருவரின் இதயங்களும் குதுாகலமாய் துடித்தன.
கும்பகோணம் ஜங்ஷன் வந்தது.
ஒரு தாடி ஆசாமி, அந்த பெட்டியில் ஏறினார். மது, வினு அருகில் அமர்ந்தார்.
'பெரியவரே... ரயில் ஏன் ரொம்ப நேரமா நிற்குது...'
'ஸ்டேஷன் மாஸ்டர்கள் சம்பள உயர்வு கேட்டு வித்தியாசமா போராடுறாங்க... ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ரயில்களுக்கு சிக்னல் கொடுக்க, 20 நிமிஷம் தாமதமாக்குகின்றனர்...'
'எல்லா ஸ்டேஷன்லயுமா...'
'இந்தியா முழுவதும்...'
'ஒவ்வொரு ஸ்டேஷன்லயும், 20 நிமிஷம் தாமதமானா தென்காசிக்கு எத்தன மணிக்கு போய் சேருமோ...'
தாடி ஆசாமி, 'மாலை, 7:00 மணியாகும்...' என்றார்.
அவரை ஆராய்ந்தான் வினு. தலையில் குடுமி; நெற்றியில் விபூதியும், குங்குமமும்; உடம்பில் ஜவ்வாது வாசனை, வயது, 50 இருக்கும். தாடியை நீவிட்டுக் கொண்டார். திடீரென்று முகம் இறுகி, 'நீங்க இரட்டைக் குழந்தைகள் தானே...' என்றார்.
'ஆமாம்...'
'உன் பெயர், 'வ, வா, வி, வீயில் ஆரம்பிக்கும் தம்பி. சிறுமியே! உன் பெயர் 'ம, மா, மெ, மே, மோவில் ஆரம்பிக்கும்...'
'ஆமா... என் பெயர் வினு; இவ பெயர் மது...'
'எங்க போகணும்...'
'பழையக் குற்றாலம்...'
'அங்கேயா...'
'ஏன் திடுக்கிடுறீங்க... பழையக் குற்றாலத்துல பேய் பிசாசா இருக்கு...' என்று வினவினாள் மது.
தாடியின் முகம் இருண்டு, 'பழைய குற்றாலத்துல எங்க...' என்றார்.
'தாத்தா பங்களாவுக்கு...'
'யாரவர்...'
'பெயர் இசக்கியப்பன்...'
தாடியை வருடி யோசித்தார். கண்களை இறுக மூடி, 'குழந்தைகளே... சொல்வதைக் கேளுங்க. பழையக் குற்றாலத்துக்கு போகாதீங்க. பயணத்தை ரத்து செய்து, சென்னைக்கு திரும்புங்க...' என்றார்.
'ஏன்...'
'போகாதீங்க என்றால் போகாதீங்க...'
'போனால்...'
'உயிருடன் திரும்ப மாட்டீங்க... '
இது எச்சரிக்கையா... முட்டாளாக்க இன்னொரு முயற்சியா... மது, வினு மனதை கேள்விகள் மொய்த்தன